19 Feb 2010

நல்லதாங்கா கிணறு

உங்களுக்கு நல்லதாங்கால் கதை தெரியுமா..? எனக்கு சின்னவயசுல இருந்தே தெரியும். என் அம்மாவும் பாட்டியும் அடிக்கடி இந்தக்கதையை சொல்வார்கள். அப்பஇந்த கதையை கேட்கும்போதெல்லாம் நல்லதாங்கா பாவம்னு தோணும். இக்கதைப்படி கணவனை இழந்த நல்லதாங்கா தன் ஏழுபிள்ளைகளுடன் அடைக்கலம் தேடி அண்ணன் விட்டுக்கு வருவாள். வந்த இடத்தில் அண்ணியின் கொடுமைக்கு ஆளாகுவாள். பச்சை வாழைமட்டையில் அடுப்பெரிக்க சொல்வது, குழந்தைகளின் சுடு கூழை ஊற்றுவது என அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதியின் கதையை  ஒட்டிசெல்லும் இக்கதை. ஒரு கட்டத்தில் அண்ணியின் கொடுமையை பொறுக்கமுடியாத நல்லாதாங்க தன் ஏழு பிள்ளைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றில் தள்ளிவிட்டு தானும் விழுந்து தற்கொலை செய்துகொள்வாள். விஷயம் கேள்விப்பட்ட அவளது அண்ணன் மனைவியை கொன்றுவிட்டு தானும் அக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள போவான். அப்பத்தான் கடவுள் அவன் முன்னாடி தோன்றி அனைவரையும் உயிர்ப்பித்ததாக கதை முடியும்.          




எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரியை படிக்கும்வரை நான் இதுவும் ஒரு கதையாக இருக்கும் என நினைத்திருந்தேன்... நம்ம முருகன் மயில்ல உலகம் சுத்தினமாதிரி. தேசாந்திரியை படித்த பின் இக்கிணற்றை பார்க்க வேண்டும் என்ற அவாவை அடக்க முடியவில்லை. கதைப்படி அவர்கள் வாழ்ந்த இடம் அர்ச்சுனாபுரம் எனும் சிற்றூர். இவ்வூர் வத்திராயிருப்பிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சமிபத்தில் இங்கு சென்றுவந்தேன். மேற்குமலைதொடர்ச்சியின் ஓரமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வெறும் வயல் வெளிகளாக ரம்மியமாக காட்சி அளிக்கிறது இவ்வூர். ஊரின் ஓரமாக எப்போதாவது தண்ணீர் வரும் அர்ச்சுனா எனும் நதியும் உள்ளது.


வத்திராயிருப்பிலுருந்து அர்ச்சுனாபுரம் செல்ல மினிபேருந்துகள் மட்டுமே உண்டு. அதுவும் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான். நான் விடியற்கலையிலே சென்றுவிட்டேன். நல்லாதாங்க கிணறுக்கு போகவேண்டும் என்றதும் ஊருக்கு சற்று வெளியே இறக்கிவிட்டு வழி காண்பித்தார்கள். வழல்வெளிகளில் அப்போதுதான் பனி விலக ஆரம்பித்திருந்தது. காலைநேரம் என்பதால் வழல்வெளிகளில் ஆள்நடமாட்டமும் குறைவாகத்தான் இருந்தது. நல்லாதாங்க கிணறு எது என விசாரித்ததில் நூனா மரத்தின் அருகில் உள்ள ஒரு கிணற்றை காண்பித்தார்கள். ஏழுபேரை விழுங்கிய எந்த அறிகுறியறுமற்று தூர்ந்து போய் ஒரு பக்கம் சரிந்தும் இருந்தது கிணறு.  யாரவது காண்பித்தால் ஒழிய தெரியாது. இன்னும் 100 வருடங்களில் இப்படி ஒரு கிணறு இருந்தது என்ற எந்த அறிகுறியுமற்று போய்விடும். இதை காக்க யாராவது நடவடிக்கை எடுக்கலாம். இதன் அருகிலயே நல்லதாங்களுக்கு ஒரு கோவிலும் கட்டி வைத்து உள்ளார்கள்.


இதைபார்த்துவிட்டு பஸ்சுக்காக வெயிட் பண்ணும் போது ஒருவருடன் அரைமணி நேரம் பேசிகொண்டிருந்தேன். அவரால் நிலையாக உட்கார முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தார். என்ன உடம்பு சரியில்லையா என்றேன். ஆமாம் தம்பி ஏதோ பன்றி கச்சாலுனு சொல்றங்களே அது பா... என்றார்.  அவரை விட்டு எப்படா கழல்வோம் என்றாகிவிட்டது.